மகாராஷ்டிர மாநிலம், தானே பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜாம்பளிநாக்கா காய்கறி சந்தையில், வியாபாரி ஒருவர் சாலையோர சாக்கடை நீரில் மக்காச்சோளத்தை கழுவும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஜாம்பளிநாக்கா சந்தையானது ஒட்டுமொத்த தானே பகுதிக்கும் ஒரு முக்கிய வணிக மையமாக விளங்குவதோடு, இங்கு மொத்த விலையில் மலிவாகக் காய்கறிகள் கிடைப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில், அங்குள்ள வைஷாலி ஹோட்டல் எதிரே கடை வைத்துள்ள ஒரு வியாபாரி, பொதுமக்களின் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சாக்கடையில் இருந்து சாலையில் வழிந்தோடும் அசுத்தமான தண்ணீரில் மக்காச்சோளக் கதிர்களைக் கழுவி விற்பனைக்கு வைப்பது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
ஏற்கனவே இந்த காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படும் பாகற்காய், வெண்டைக்காய்,போன்ற காய்கறிகள் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும், புதியது போலக் காட்சியளிப்பதற்காகவும் அவற்றின் மீது செயற்கை ரசாயன நிறங்கள் பூசப்படுவதாகப் பல்வேறு புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தன.
அந்த வரிசையில் தற்போது சாக்கடை நீரில் சோளம் கழுவப்பட்ட விவகாரமும் அம்பலமாகியுள்ளதால், அப்பகுதி உள்ளூர் மக்களிடையே கடுமையான ஆத்திரமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சுகாதாரமற்ற செயல்கள் மக்களின் ஆரோக்கியத்திற்கு நேரடியாக வேட்டு வைப்பதாக அமைந்துள்ளதால் உணவுப் பாதுகாப்புத் துறையினரும் அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அந்தப் பகுதி காய்கறிகளின் தூய்மையை உறுதி செய்வதோடு, தவறு செய்த வியாபாரிகள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
