உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நள்ளிரவு 1 மணியளவில், பெற்றோர் தூங்கிய பிறகு 7 வயது சிறுவன் ஒருவன் டீ குடிப்பதற்காக ‘ராபிட்டோ’ பைக் டாக்சி புக் செய்த சுவாரசியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் புக் செய்த லொகேஷனுக்கு வந்த ராபிட்டோ ஓட்டுநர், முகவரியை உறுதி செய்ய அழைத்தபோது மறுமுனையில் சிறுவனின் குரல் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். “அம்மா, அப்பா தூங்கிட்டாங்க, எனக்கு டீ குடிக்கணும் போல இருக்கு, என்னை கூட்டிட்டுப் போய் டீ குடிக்க வச்சுட்டு திரும்ப இங்கேயே விட்ருங்க” என்று அந்தச் சிறுவன் மழலை மாறாமல் கூறியுள்ளான்.

“>

அதோடு இதைக் கேட்டு பதறிய ஓட்டுநர், “முன்ன பின் தெரியாதவங்க கூட இப்படி நள்ளிரவில் போவது தப்பு, டீ வேணும்னா அப்பாவை எழுப்பிக் கேளு” என்று புத்திமதி கூறி அந்த ஆர்டரை கேன்சல் செய்துள்ளார்.
சிறுவனின் பாதுகாப்பைக் கருதி ஆர்டரை ரத்து செய்த அந்த ஓட்டுநருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வரும் அதே வேளையில், நெட்டிசன்கள் சிலர் மாற்றுக்கருத்து ஒன்றையும் முன்வைத்து வருகின்றனர்.

இதனால் ஓட்டுநர் ஆர்டரை கேன்சல் செய்தாலும், அந்தச் சிறுவன் வேறு ஒரு பைக் டாக்சியை புக் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதால், ஓட்டுநர் நேரடியாக அந்த முகவரிக்குச் சென்று அவனது பெற்றோரை எழுப்பி விபரத்தைக் கூறி எச்சரித்திருக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் சிறுவர்கள் கையில் மொபைல் போன் கிடைத்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வளவு விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.