கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11 மாதப் பெண் குழந்தை ஒன்று கட்டிலில் இருந்து விழுந்து தற்செயலாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் கொடூரக் கொலை என்பது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 11 மாதக் குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததது. ஆரம்பத்தில் இது ஒரு இயற்கை மரண வழக்காகவே காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு இந்த வழக்கின் போக்கு முற்றிலும் மாறியது. இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அத்வைத் கூறுகையில், “குழந்தையின் உடலில் ஏற்பட்டிருந்த கடுமையான உள் காயங்கள், வெறும் 2 அடி உயரமுள்ள கட்டிலில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என மருத்துவ அறிக்கை தெரிவித்தது. குழந்தையின் விலா எலும்புகள் மற்றும் பிற எலும்புகள் உடைந்திருந்ததோடு, கடுமையான உள் ரத்தப்போக்கு, அதிர்ச்சி மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகவே மரணம் நிகழ்ந்துள்ளது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது” என்றார். மேலும், குழந்தையின் முகம், நெஞ்சு, கால்கள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியிலும் பல வெளிக்காயங்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
தொடர் விசாரணையில், சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதும், அப்போது தங்களுக்கு நடுவில் அழுதுகொண்டிருந்த குழந்தையை ஆத்திரமடைந்த தந்தை தூக்கி கீழே வீசியதும் தெரியவந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த உண்மைகளின் அடிப்படையில், போலீசார் தற்போது இச்சம்பவத்தைக் கொலை வழக்காக மாற்றி, தந்தையைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் தாயும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலையில் தாயின் பின்னணி மற்றும் முழுமையான பங்கு என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
