இங்கிலாந்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், இயற்கையைப் பாதுகாப்பதற்காக வேறு வழியே தெரியாமல் ஒரு நதியையே காதலித்துத் திருமணம் செய்துகொண்ட விசித்திர சம்பவம் உலகளவில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் நீர்வழிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் நச்சுக்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருவதைக் கண்டு மெக் என்ற அந்தப் பெண் நீண்ட நாட்களாகக் கவலை கொண்டுள்ளார். குறிப்பாக, அங்கிருக்கும் ஏவன் நதியின் அவல நிலையை உலகிற்கு உணர்த்தவும், அதன் தூய்மையைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்த அவர், கடந்த 2023-ஆம் ஆண்டு அந்த நதியைத் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
அன்று முதல், அவர் தனது பெயரை ‘மெக் ஏவன்’ என்று மாற்றிக்கொண்டு, தன்னை அந்த நதியின் மனைவியாகவே உலகிற்கு முன்னிறுத்தி வருகிறார். நதியைத் திருமணம் செய்ததோடு நின்றுவிடாமல், தற்போது ஏவன் நதிக்கு மனிதர்களைப் போன்ற சட்டப்பூர்வ உரிமைகளையும், பாதுகாப்பையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ஒரு புதுமையான சுற்றுச்சூழல் இயக்கத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.
நதிகளுக்குச் சட்ட அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே அவற்றைக் கழிவுநீர் மூலம் மாசுபடுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், மெக் ஏவன் தற்போது மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இயற்கையைக் காக்கப் பல இயக்கங்கள் இருந்தாலும், நதியையே திருமணம் செய்து அதன் உரிமைகளுக்காகப் போராடி வரும் இந்த இங்கிலாந்து பெண்ணின் அசாத்திய முயற்சிக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
