அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய அவினாஷ் நர்னே என்பவர், தனது மனைவி ராஜீதா சபினேனியை கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம், வாஷிங்டனின் உள்ள தங்களது குடியிருப்பில் ராஜீதா கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், திருமணத்திற்கு முன்பே தனக்கு இருந்த ஒரு பெண்ணுடனான ரகசிய உறவைத் தொடரவே, மனைவியைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனது மனைவியைக் கொலை செய்த மறுநாளே, அந்தப் பெண்ணுக்கு ராஜீதாவின் உடலின் புகைப்படத்தை அனுப்பி, தனது காதலுக்குத் தடையாக இருந்தவரை நீக்கிவிட்டதாக அவர் உறுதிப்படுத்திய அதிர்ச்சிகரமான தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவியின் மரணத்தை மர்ம மரணமாக மாற்ற, அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் யாரோ உள்ளே புகுந்து கொலை செய்ததாக நாடகமாடினார். ஆனால், அந்த நேரத்தில் வேறு யாரும் வீட்டிற்குள் நுழையவில்லை என்பதை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் தடயங்கள் மற்றும் ஸ்மார்ட்-லாக் தரவுகள், அவர் மீதான குற்றச்சாட்டை வலுப்படுத்தின.
மேலும், மனைவி உயிரிழந்த தினத்தன்று தனது காதலியுடன் அவர் பலமுறை பேசியதும், அடுத்த நாள் உடலின் புகைப்படத்தை அனுப்பியதும் ஆதாரங்களாகச் சிக்கியுள்ளன. தற்போது 5 மில்லியன் டாலர் பிணையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவினாஷ் நர்னே, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
