அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக நீடித்து வந்த உலகளாவிய அரசியல் பதற்றம் தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது. துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டின் போது, டிரம்ப் இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து முதன்முறையாக ஒரு மென்மையான போக்கை கையாண்டுள்ளார். மெலோனி ஒரு நல்ல மனிதர் என்றும், இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். துருக்கி அதிபர் ரசிப் தையிப் எர்டோகனுடன் நடத்திய கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில், மெலோனி உடனான உறவில் ஏற்பட்ட கசப்புக்கான காரணம் குறித்து டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த டிரம்ப், ஈரான் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இத்தாலி ஆதரவு அளிக்கவில்லை என்றும், இதனால் தான் ஏமாற்றமடைந்ததாகவும் கூறினார். இருப்பினும், தான் இன்னும் மெலோனியை மரியாதையுடன்தான் பார்க்கிறேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பிரான்சில் நடந்த ஜி7 மாநாட்டின் போது, மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வமாக இருந்ததாக டிரம்ப் கூறியதில் இருந்தே இந்த இரு தலைவர்களுக்கிடையேயான மோதல் ஆரம்பமானது.
Trump on Italy’s Meloni:
I think she is a nice person, actually.
Our relationship became a little bad because she refused to help us with Iran.
It soured my relationship with her a little bit, but I like her. pic.twitter.com/peNqD9maJO
— Clash Report (@clashreport) July 7, 2026
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக, டிரம்ப் தனது சமூக வலைதளமான ‘ட்ரூத் சோசியல் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியது. அந்தப் புகைப்படத்தில் டிரம்ப்பின் பின்னால் மெலோனி நிற்பது போல இருந்தது, அதற்கு டிரம்ப் “தடை உத்தரவு தேவை” என்று தலைப்பிட்டிருந்தார். டிரம்ப்பின் இந்த சமூக வலைதளப் பதிவு, இத்தாலி பிரதமரைக் கேலி செய்யும் முயற்சி என்று கூறி இத்தாலியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
டிரம்ப்பின் இத்தகைய தனிப்பட்ட கருத்துக்கள் தமக்கு ஆச்சரியம் அளிப்பதாகக் கூறிய ஜார்ஜியா மெலோனி, தனது நட்பு நாடுகளின் தலைவர்கள் மீது கூட தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வீச டிரம்ப் தயங்குவதில்லை என்று கடுமையாகச் சாடினார். இதனைத் தொடர்ந்து இத்தாலிய அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் டிரம்ப்பின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
எனினும், தற்போதைய நேட்டோ மாநாட்டில் டிரம்ப் காட்டியுள்ள இந்த இணக்கமான அணுகுமுறை, இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேச விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நீடித்தாலும், இந்த மோதலை மேலும் வளர்க்க டிரம்ப் விரும்பவில்லை என்பதையே அவரது சமீபத்திய பேச்சு உணர்த்துகிறது.
