உலக வரைபடத்தில் வியட்நாம் நாடு அதன் அழகிய கடற்கரைகள், ஹாலாங் பே மற்றும் ஹனோய் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர் பெற்றது என்றாலும், அங்குள்ள விசித்திரமான மற்றும் ஆபத்தான உணவு கலாச்சாரமும் உலகளவில் மிகவும் பிரபலமானது. அந்த வகையில், வியட்நாமில் உயிரோடு இருக்கும் பாம்பை உடனே வெட்டி, அதன் துடிதுடிக்கும் இதயத்தை அப்படியே பச்சையாக விழுங்கும் வினோத உணவுப் பழக்கம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் வியட்நாமிற்குச் சென்று இந்த விசித்திரமான உணவைச் சாப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பாம்பின் உடலில் இருந்து இதயம் தனியாக எடுக்கப்பட்ட பிறகும் அது துடித்துக்கொண்டே இருந்தது. அந்த பயணி அதை அப்படியே வாயில் போட்டு மெல்லாமல் விழுங்கியதோடு, அதன் பின் ஓட்கா மது மற்றும் தண்ணீரைக் குடித்து அதை இறக்கியுள்ளார். இந்த உணவைச் சாப்பிட்ட பிறகு, தனது உடலுக்குள் இன்னொரு இதயம் துடிப்பது போன்ற ஒரு விசித்திரமான அதிர்வை உணர்ந்ததாக அந்த பயணி தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
வியட்நாமியர்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி, பாம்பின் இதயம் மற்றும் அதன் இரத்தம் ஆண்களின் உடல் வலிமையையும், ஸ்டாமினாவையும் அதிகரிக்க உதவும் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. அங்குள்ள சில உணவகங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உடனேயே, அவர்கள் கண் முன்னே உயிரோடு இருக்கும் பாம்புகள் வெட்டப்பட்டு இந்த டிஷ் தயாரிக்கப்படுகிறது. பாம்பின் இதயம் மட்டுமன்றி அதன் இரத்தம், மாமிசம், பித்தப்பை மற்றும் எலும்புகள் கூட தனித்தனி உணவுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன; குறிப்பாக அதன் இரத்தம் மதுவுடன் கலந்து ஆற்றல் தரும் பானமாகக் குடிக்கப்படுகிறது.
View this post on Instagram
இந்த இதயம் இனிப்பு மற்றும் மாமிச சுவையுடன் கலந்திருப்பதாகவும், இதை மெல்ல முடியாது என்பதால் அப்படியே விழுங்குவதே இதன் ட்ரிக் என்றும் கூறப்படுகிறது. வியட்நாம் மட்டுமன்றி சீனா, கொரியா போன்ற ஆசிய நாடுகளிலும் இந்த பழக்கம் இருந்தாலும், வியட்நாமில்தான் இது அதிகம் பேசப்படுகிறது. எனினும், விலங்கு நல அமைப்புகள் இந்த கொடூரமான நடைமுறைக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, இதற்குத் தடை விதிக்கக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால், பல தலைமுறைகளாகத் தொடரும் பாரம்பரிய கலாச்சாரம் என்பதால் இதற்குத் தடை விதிப்பது அங்கு அவ்வளவு எளிதாக இல்லை.
