உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாகச் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான மக்கள் தொகை வீழ்ச்சியைக் சந்தித்து வரும் நிலையில், அதே போன்ற ஒரு சிக்கலைச் சிங்கப்பூர் நாடும் எதிர்கொண்டுள்ளது. அங்குப் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதலபாதாளத்திற்குச் சரிந்துள்ளது. இந்தச் சூழலை மாற்றி, நாட்டின் மக்கள் தொகையைச் சீரான அளவில் நிலைநிறுத்துவதற்காக அந்த நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வங் ஒரு மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான திட்டத்தை நாட்டு மக்களுக்குப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மக்கள் பெருக்கத் திட்டத்தின்படி, சிங்கப்பூரில் இனி பிறக்கும் ஒவ்வொரு பச்சிளம் குழந்தைக்கும் அவர்கள் தனது 17-வது வயது எட்டும் வரை பல்வேறு கட்டங்களாக மொத்தம் 70,000 சிங்கப்பூர் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 53 லட்சம் ரூபாயைப் பரிசாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை ஒரே கட்டமாக வழங்கப்படாமல், குழந்தை பிறந்த உடனேயே ஆரம்பக் கைச்செலவுக்காக இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்றோர்களின் கைகளில் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அதன்பிறகு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தொகையாக இந்திய மதிப்பில் ஏறக்குறைய 1.25 லட்சம் ரூபாய் பெற்றோர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் கூடுதல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிதி உதவிகளுடன் நின்றுவிடாமல், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான செலவுகளைக் குறைப்பது, பெற்றோர்களுக்குக் கூடுதல் விடுமுறை நாட்களை வழங்குவது மற்றும் வீடு வாங்குவதற்கான சிறப்புச் சலுகைகள் போன்ற பல்வேறு நன்மைகளும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
