ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் பாம்பு கடித்த இளைஞர் ஒருவர், அவரைக் கடித்த அதே பாம்பை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைக்காக வந்த இளைஞரின் கையில் இருந்த பிளாஸ்டிக் பெட்டிக்குள் பாம்பு இருந்ததைக் கண்டு மருத்துவமனையில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ஜெனா என்பவர் நண்பர்களுடன் மாலை நேரத்தில் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரை விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று கடித்ததாகக் கூறப்படுகிறது. பாம்பு கடித்ததும் வழக்கமாக மருத்துவமனைக்குச் செல்வார்கள். ஆனால், விஜய் செய்த செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தன்னை கடித்த பாம்பை விஜய் பிடித்து, ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்குள் அடைத்துள்ளார். பின்னர் அந்தப் பாம்பையும் உடன் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள சமூக சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பெட்டிக்குள் உயிருடன் இருந்த பாம்பைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவமனையில் விஜய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பு கடித்தபோதிலும், அதைப் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்கே இளைஞர் வந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.