உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் மேற்கொண்ட ஆபத்தான சாகசம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரீல் எடுத்து சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆர்வத்தில், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காணொளி காவல்துறையின் கவனத்துக்கும் சென்றது.

பிரதாப்கர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஆகாஷ் பாசி என்பவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக அவரது சகோதரர் விகாஸ் பாசி உள்ளிட்ட நண்பர்கள் ஒன்றுகூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது காரின் முன்பகுதியில் கேக்கை வைத்து, வாளைப் பயன்படுத்தி வெட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, கொண்டாட்டம் சாலைக்கும் சென்றதாகவும், அங்கு பல வாகனங்களை நிறுத்தி சாலையை மறித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆகாஷ் மற்றும் விகாஸ் ஆகியோர் காரின் மேற்கூரையில் நின்றபடி காணொளி மற்றும் ரீல் எடுத்துள்ளனர். இதனால் அந்த வழியாகச் சென்ற பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காணொளியை ஆய்வு செய்த காவல்துறையினர், ஆகாஷ் பாசி மற்றும் விகாஸ் பாசி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், காரின் ஓட்டுநர் மற்றும் சில இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஆபத்தான சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.