பெங்களூரு சங்கி டேங்க் ஏரி பகுதியில், தனது காதலனுக்கு “வாழ்க்கை போதும், எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளப் போகிறேன்” என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, 20 வயது கல்லூரி மாணவி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உயிரிழந்த மாணவி சிக்கபனவராவைச் சேர்ந்த தேஜஸ்வினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஜலஹள்ளியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். திங்கட்கிழமை மதியம் 12:30 மணியளவில் கல்லூரியை விட்டு வெளியேறியவர், வீட்டிற்குச் செல்லாமல் மாலை 3:55 மணியளவில் சங்கி டேங்க் ஏரி பகுதிக்கு வந்துள்ளார்.

அதோடு அங்குள்ள சிசிடிவி காட்சிகளின்படி, அவர் ஏரிக்கரையில் உள்ள ஒரு கல் பலகையின் மீது நீண்ட நேரம் அமர்ந்திருந்ததும், மாலை 5:55 மணி வரை அங்கே சுற்றித் திரிந்ததும் தெரியவந்துள்ளது. அதன் பிறகு சரியாக 6 மணியளவில் அவர் ஏரியில் குதித்திருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பாக, காதலனுக்கு அனுப்பிய மெசேஜைப் பார்த்து பதறிய காதலன், உடனடியாக தேஜஸ்வினியின் தாயார் புஷ்பாவிற்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சதாசிவ்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நள்ளிரவு 1 மணி வரை தீயணைப்புத் துறையினரும் மீட்புக்குழுவினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏரிக்கரையில் தேஜஸ்வினியின் பையும் மொபைல் போனும் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 18வது கிராஸ் நுழைவாயில் அருகே அவரது உடல் ஏரி நீரில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேஜஸ்வினியின் பெற்றோர் குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.