மேற்கு வங்க மாநிலம் பாராய்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, உடலைக் குளத்தில் வீசிய கொடூரத்தைச் செய்தவன் பிரபாஸ் மண்டல். இந்தச் சம்பவத்தை நேரில் சென்று ஆய்வு செய்யக் குற்றவாளியை அழைத்துச் சென்றபோது, காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றான் பிரபாஸ். இதையடுத்து நடந்த என்கவுண்டரில் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்த தன் மகனின் சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அவனது தாய் புதன்கிழமை வெளியிட்ட அதிரடி அறிக்கை ஒட்டுமொத்த தேசத்தையுமே அதிர வைத்துள்ளது. ”காவல்துறையினர் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதைத் தாராளமாகச் செய்யட்டும், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நான் முன்பே சொல்லிவிட்டேன். என் மகன் செய்த பாவங்களுக்கான தண்டனையை அவன் அனுபவித்துவிட்டான். அவனது சடலத்தை நான் பெற்றுக்கொள்ள மாட்டேன்; அவனது பிணத்தை என் வீட்டுக்குள்ளும் கொண்டு வரமாட்டேன்.
அவன் எதுவுமே உருப்படியாகச் செய்யவில்லை, தப்பு பண்ணினான், அதுக்கு இப்ப சரியான தண்டனை அவனுக்குக் கிடைச்சிருச்சு,” என்று அந்தத் தாய் மிகுந்த ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். பெற்ற மகனே என்றாலும், செய்த கொடூரத்தைக் கண்டு அவனைத் தள்ளி வைத்த அந்தத் தாயின் முடிவு, சமூக வலைத்தளங்களில் விவாதங்களையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்துள்ளதற்கான நிம்மதியையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
