டெல்லியில் அரசுப் பேருந்து ஒன்றின் மீது போதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதும், அதற்கு அந்தப் பேருந்தின் ஓட்டுநர் தகுந்த பாடம் கற்பித்ததுமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

டெல்லி போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான பேருந்து பயணிகள் ஏறி இறங்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த போது, அங்கே வந்த போதை ஆசாமி ஒருவர் பேருந்தின் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டு, அதன் மீது தொடர்ந்து சரமாரியாக முஷ்டியால் குத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

“>

அதோடு அங்கிருந்த பொதுமக்களும் பயணிகளும் இதனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அந்த நபர் தனது அநாகரிகமான செயலை நிறுத்தாமல் தொடர்ந்து பேருந்தை உதைத்தும் குத்தியும் வந்துள்ளார். இந்தத் தொல்லையைத் தாங்க முடியாத பேருந்தின் ஓட்டுநர், உடனே பேருந்தின் படிக்கட்டிற்கு வந்து அந்த போதை ஆசாமியை பலமாக எட்டி உதைத்து பேருந்தை விட்டு தூர விரட்டியடித்துள்ளார்.

இதனால் ஓட்டுநர் கொடுத்த இந்த ஒற்றை உதை அந்த நபரின் போதையை இறக்கும் வகையில் தகுந்த பாடமாக அமைந்தது. இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர, அது தற்போது நெட்டிசன்களிடையே பலத்த சிரிப்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் “அந்த நபருக்குச் சரியான முறையில் சிகிச்சை கிடைத்துவிட்டது” என்றும், “டெல்லி பொதுப் போக்குவரத்து எப்போதும் மக்களுக்கு இலவச பொழுதுபோக்கிற்குப் பஞ்சம் வைப்பதில்லை” என்றும் பலரும் இந்த வீடியோவிற்கு நகைச்சுவையாகக் கருத்துகளைத் தெரிவித்து ஓட்டுநரின் அதிரடி செயலை ஆதரித்து வருகின்றனர்.