அப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் தொடக்கக் கால அஸ்திவாரமாக விளங்கிய முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் தனது 38வது வயதில் காலமானார். நீண்ட நாட்களாக ‘HLH’ எனும் அரிய வகை கடுமையான நோயெதிர்ப்பு மண்டல கோளாறால் பாதிக்கப்பட்டு, இந்தியாவின் புது தில்லி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதில் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், அவர் இறந்த அடுத்த நாள் அவரது 39-வது பிறந்தநாளாகும். அவரது பிறந்தநாளன்றே அவருடைய உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டதால், அவருக்கு இறுதி மரியாதை மற்றும் தோள் கொடுத்த சக வீரர்களும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் கண்ணீர் விட்டு அழுதனர்.

மேலும் காபூலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈத்கா மசூதியில் இறுதித் தொழுகை நடத்தப்பட்டு, பின்னர் அங்குள்ள மரஞ்சன் ஹில் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயரமான தோற்றம், நீண்ட தலைமுடி மற்றும் அசுர வேகத்தில் பந்துவீசும் தனித்துவமான பாணியைக் கொண்ட ஷாபூர் சத்ரான், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அப்கானிஸ்தான் அணியை தடம் பதிக்கச் செய்ததில் மிக முக்கியப் பங்கு வகித்தார்.

அதோடு இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான வீரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த அவர், 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான அப்கானிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

இந்நிலையில் தனது பத்தாண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளையும், 36 டி20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அப்கானிஸ்தானின் ஆரம்பக்கால வளர்ச்சிக்கு வித்திட்ட இந்த இளம் வீரரின் மறைவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.