அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள பெல்லூவ் நகரில், தெலுங்கானாவைச் சேர்ந்த இந்திய மென்பொருள் பொறியாளரான அவினாஷ் நார்னே, தன் மனைவி ராஜிதா சப்பினைனியை திட்டமிட்டுப் படுகொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு கடந்த அக்டோபர் 2025-ல், தன் மனைவி குளியலறையைப் பூட்டிக்கொண்டு வெளியில் வரவில்லை என்று அவினாஷ் போலீசாருக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ராஜிதா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது ஏதோ விபத்து அல்லது உடல்நலக்குறைவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அவினாஷ் முயன்றார்.

ஆனால், உடற்கூறாய்வு முடிவுகளில் ராஜிதா கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பின் டிஜிட்டல் கதவு பூட்டு தரவுகளை ஆய்வு செய்தபோது, அந்த நேரத்தில் அந்நிய நபர் யாரும் வீட்டிற்குள் வரவில்லை என்பதும், அவினாஷ் மட்டுமே அங்கு இருந்தார் என்பதும் போலீசாருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

இதனால் பல மாதங்களாக அமெரிக்க போலீசார் நடத்திய தீவிர டிஜிட்டல் தடயவியல் மற்றும் மொபைல் போன் விசாரணையில், இந்த கொடூரக் கொலைக்கான அதிர்ச்சியூட்டும் பின்னணி அம்பலமாகியுள்ளது. அவினாஷுக்கு இந்தியாவில் ஒரு பெண்ணுடன் ரகசிய காதல் தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண் இவர்களது திருமணத்திற்குக்கூட வந்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் அவினாஷ் அந்த காதலியுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இது குறிப்பாக, ராஜிதா இறந்த அன்றைய தினமே காதலிக்கு 4 முறை போன் செய்த அவினாஷ், அடுத்த நாள் ராஜிதாவின் இறந்த உடலை புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி, கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, அவினாஷ் தயாரித்துக் கொடுத்த ஸ்மூத்தி போன்ற பானங்கள் கசப்பாகவும், “இருமல் மருந்து” போலவும் இருந்ததாக ராஜிதா தன் கணவருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அவினாஷின் சாதனங்களில் விஷம் தொடர்பான இணைய தேடல்களும் கண்டறியப்பட்டன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், இது திட்டமிட்ட முதல்-நிலை கொலை என நீதிமன்றம் உறுதி செய்து, அவினாஷுக்கு 5 மில்லியன் டாலர் பிணைத்தொகை விதித்து சிறையில் அடைத்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.