தரைமட்டத்தில் இருந்து அண்ணாந்து பார்க்கும் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து, கழுகுப் பார்வையில் உலகைக் ரசித்தபடியே பறப்பது பலரின் சிறுவயதுக் கனவாக இருக்கும். இந்தியாவில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. முன்னணி விமான நிறுவனங்கள் தங்களின் விமானங்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருவதால், திறமையான பைலட்களுக்கான   புதிய வேலைவாய்ப்புகளும் ஆயிரக்கணக்கில் உருவாகி வருகின்றன.

ஒருவர் வணிக ரீதியிலான விமானியாக  உருவாக வேண்டுமானால், முதலில் பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல்  மற்றும் கணிதம்  பாடங்களை முதன்மையாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது கட்டாயமாகும். தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகத்தால்  அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழைப் பெறுவதுடன், அதற்கான தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து ‘வர்த்தக விமானி உரிமம்’  பெற்ற பிறகு, பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை விமான நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விமானிகளின் ஊதியத்தைப் பொறுத்தவரை, அவர்களின் பணி அனுபவம், சார்ந்திருக்கும் நிறுவனம், வகிக்கும் பதவி மற்றும் இயக்கும் விமான வகை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆரம்ப நிலையில் ‘ஜூனியர் பைலட்டாக’ பணியில் சேருபவர்களுக்கு மாதத்திற்குச் சுமார் ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த பதவி உயர்வுகளின் போது, இந்த ஊதியம் மாதத்திற்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை உயர்கிறது. அனுபவமிக்க மூத்த விமானிகள்  மாதத்திற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பெறுகின்றனர்.

இத்துறையில் உச்சபட்ச பதவியான ‘கேப்டன்’ மற்றும் ‘பயிற்சி கேப்டன்’   நிலையை அடைபவர்கள் மிக அதிக அளவிலான ஊதியத்தைப் பெறுகின்றனர். இவர்கள் இயக்கும் விமானத்தின் கொள்ளளவு மற்றும் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளிகளைப் பொறுத்து, ஆண்டுக்குச் சுமார் ரூ.90 லட்சம் முதல் ரூ.1.20 கோடி வரை பிரம்மாண்டமான ஊதியத் தொகுப்பை  ஈட்டுகின்றனர். எதிர்காலத்தில் சர்வதேச அளவில் விமானிகளின் தேவை மேலும் அதிகரிக்க உள்ளதால், இத்துறை இளைஞர்களுக்குச் சிறந்ததொரு வேலைவாய்ப்பு மண்டலமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.