இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கியில் ‘புரொபேஷனரி ஆபீசர்’ (PO) எனப்படும் 1,500 பயிற்சி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1,446 வழக்கமான பணியிடங்களும், 54 முந்தைய காலியிடங்களும் அடங்கும்.

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1 ஏப்ரல் 2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.bank.in என்ற முகவரிக்குச் சென்று, அதன் ‘Careers’ பிரிவின் மூலம் வரும் ஜூலை 8-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இப்பணிக்கான தேர்வு முறை மூன்று கட்டங்களாக நடத்தப்படும். முதலாவதாக, 100 மதிப்பெண்களைக் கொண்ட ஆன்லைன் வழியிலான முதற்கட்டத் தேர்வு 1 மணி நேரம் நடைபெறும்; இதில் தவறான பதில்களுக்கு 1/4 (0.25) மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்ததாக ‘மெயின்ஸ்’ முதன்மைத் தேர்விற்கும், அதனைத் தொடர்ந்து இறுதிச் சுற்றான குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கும் அழைக்கப்படுவர். பொது, ஓபிசி மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ₹750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனைத்து அரசுப் படிகளுடன் சேர்த்து மாதந்தோறும் ₹48,480 முதல் ₹85,920 வரை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.