மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தனது நாடு தழுவிய சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள 1,626 அப்ரண்டிஸ் (Apprentice) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு அப்ரண்டிஸ் விதிகளின்படி மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு, ஒரு வருட காலத்திற்குச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
என்னென்ன பதவிகள் காலியாக உள்ளன?
டிரேடு அப்ரண்டிஸ் பிரிவில்: அட்டெண்டன்ட் ஆபரேட்டர் (கெமிக்கல் பிளாண்ட்), ஃபிட்டர், பாய்லர், செகரட்டேரியல் அசிஸ்டென்ட் (அலுவலக உதவியாளர்), அக்கவுண்டன்ட் (கணக்காளர்) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்.
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பிரிவில்: கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்.
கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும்?
விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப 12-ம் வகுப்பு (+2), ஐடிஐ (ITI), டிப்ளமோ (Diploma) அல்லது பிஎஸ்சி, பிஏ, பிகாம் போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை (Degree) முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி (30.06.2026 தேதியின்படி):
விண்ணப்பிக்கும் நபர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 24க்குள்ளும் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி வயது தளர்வு: எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) பொதுப் பிரிவில் 10 ஆண்டுகள், ஓபிசி பிரிவில் 13 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி பிரிவில் 15 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.
ஆட்கள் தேர்வு செய்யப்படும் முறை:
இந்த வேலைவாய்ப்பிற்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் (Written Exam) நடத்தப்படாது. விண்ணப்பதாரர்கள் தங்களது படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதிப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும்.
அதன் பின்னர் நேரடியாகச் சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://iocl.com/apprenticeships என்ற பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 28.07.2026 (மாலை 5:00 மணி வரை)
