இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், திருமணத்திற்கு முன்பாக ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொண்டதற்காக இளம் ஜோடிக்கு பகிரங்கமாகச் சவுக்கடி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், இந்த ஜோடி காரில் அமர்ந்து முத்தமிடும் காட்சியை ‘டிக்டாக்’ தளத்தில் நேரலையாகப் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஷரியா சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த ஜோடி கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆச்சே மாகாணத்தில் ஷரியா சட்டம் மிகவும் தீவிரமாக அமலில் உள்ளதால், சூதாட்டம், மது அருந்துதல் மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் போன்ற செயல்களுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. நீதிமன்றம் இந்தத் தம்பதிக்கு தலா 25 சவுக்கடிகள் எனத் தீர்ப்பளித்திருந்தது.
ஏற்கனவே அவர்கள் நான்கு மாதங்கள் சிறையில் இருந்ததைக் கணக்கில் கொண்டு, தண்டனை 21 சவுக்கடிகளாகக் குறைக்கப்பட்டு, பொதுமக்களின் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் மொபைல் போன் ஆதாரங்களை அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
