ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேமு சைனி என்னும் இளைஞர், தான் முதன்முதலாக விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றபோது, தன் வாழ்நாளைத் தியாகம் செய்து வளர்த்த பெற்றோரையும் கூடவே அழைத்துச் சென்று பெருமைப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளது.

மேலும் ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்து, பெற்றோர் பட்ட கஷ்டங்களை நேரில் கண்ட அந்த இளைஞர், வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்ததும் தான் கண்ட கனவை தன் பெற்றோரின் கனவாக மாற்றியுள்ளார். தனது முதல் விமானப் பயணத்தின் போதே, தன் தாய் மற்றும் தந்தையையும் அருகில் அமரவைத்து வானில் பறக்கச் செய்த காட்சி, பெற்றோர் மீது ஒரு மகனுக்கு இருக்க வேண்டிய அளப்பரிய அன்பையும் கடமையையும் உலகிற்கு உணர்த்துகிறது.

விமானத்தில் ஏறியதில் இருந்து தங்களது மகன் தங்களுக்குக் கொடுத்த இந்த மரியாதையையும் அன்பையும் கண்டு அந்தப் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வாழ்நாளில் விமானத்தைப் பக்கத்தில் கூடப் பார்த்திராத எளிய கிராமத்துப் பெற்றோர், மேகங்களுக்கு நடுவே பறந்த அந்தத் தருணத்தில் அவர்களின் கண்களில் வழியத் தொடங்கிய ஆனந்தக் கண்ணீரும் முகத்தில் மலர்ந்த பூரிப்பும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

மேலும் தன் பெற்றோர் அனுபவித்த ஒவ்வொரு நொடியையும் அந்த இளைஞர் தனது போனில் பதிவு செய்து வீடியோவாகச் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது.

இதனால் சுயநலமும் நவீனப் மோகமும் நிறைந்த தற்போதைய காலகட்டத்தில், தங்களை ஆளாக்கிய பெற்றோரை முதியோர் இல்லங்களில் தள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், கேமு சைனியின் இந்த நெகிழ்ச்சியான செயல் ஒரு மிகச்சிறந்த நல்வழிகாட்டியாக அமைந்துள்ளது.

இது “பெற்றோருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைம்மாறு அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்ப்பதுதான்” என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை ஆழமாகப் பதிய வைத்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “உண்மையான மகன் என்றால் இவன்தான், ஒவ்வொரு பெற்றோருக்கும் இப்படி ஒரு மகன் கிடைக்க வேண்டும்” என்று வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் மழையாகப் பொழிந்து வருகின்றனர்.

“>