தமிழக சட்டப்பேரவையில், 2020-ஆம் ஆண்டிற்கு முன்பு மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கமே இல்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அமைச்சரின் இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை நிரூபிக்கும் வகையில், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளும், முந்தைய செய்திக் குறிப்புகளும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் தரவுகளின்படி, தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டில் 3,812 ஆகப் பதிவாகியிருந்த போதைப்பொருள் வழக்குகள், 2020-ஆம் ஆண்டில் 5,403 ஆக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகளில், 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருந்துள்ளது என்பதை முன்னணி ஊடகத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், 2019-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 28,750 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவே 2020-ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரித்து 2,98,678 கிலோவாகப் பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 2020-க்கு முன்பு போதைக்கலாச்சாரம் இல்லை என அமைச்சர் கூறும் நிலையில், 2017-ஆம் ஆண்டிலேயே மதுரையில் படித்த இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் சப்ளை செய்யப்பட்டதாகவும், அவர்களை ரவுடி கும்பல்கள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியதாகவும் நாளிதழ்களில் விரிவான செய்திகள் வெளியாகியிருந்தன.

 

“>

 

ஆதாரபூர்வமான இந்தத் தரவுகள் அனைத்தும் 2020-க்கு முன்பே தமிழகத்தில் போதைப்பொருள் வலைப்பின்னல் மிகத் தீவிரமாக இருந்ததை அப்பட்டமாக நிரூபிக்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்க, தரவுகளைச் சரிபார்க்காமல் சட்டப்பேரவை போன்ற ஒரு முக்கிய அவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எவ்வாறு இப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்தார் என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் தீவிரமாக எழுப்பப்பட்டு வருகிறது.