நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் நடிகர் பாவா லட்சுமணன். சர்க்கரை நோயின் தீவிர பாதிப்பால் தனது கால் விரல்களை இழந்த அவர், மிகவும் வறுமையான சூழலில் மருத்துவச் செலவுகளுக்கும், வீட்டு வாடகை கட்டக்கூட வழியின்றித் தவித்து வந்தார்.

இவரது துயரமான நிலையை அறிந்த தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, சமூக வலைதளங்களில் உதவியைக் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் கூல் சுரேஷ் அவருக்குத் தங்குவதற்கு வீடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும், நடிகர் ஜீவா, டிவி நடிகர் பாலா மற்றும் நடிகர் லெஜெண்ட் சரவணன் எனப் பலரும் பாவா லட்சுமணனுக்கு நிதியுதவி அளித்து அவருக்கு ஆதரவாக நின்றனர்.

இந்த நிலையில், பாவா லட்சுமணன் தற்போது எம்எல்ஏ-க்கள் தங்கும் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, கடந்த இரண்டு நாட்களாக தான் அந்த விடுதியில் தங்கியிருப்பதாகவும், அமைச்சர் ராஜ்மோகன் தன்னிடம் நேரில் பேசி இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் தகுந்த சிகிச்சை பெற்றுத் தனது உடல்நிலையை முழுமையாகக் குணப்படுத்துவதாக அமைச்சர் உறுதி அளித்திருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.