மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், திருமணமான மறுநாளே மணமகள் தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரைச் சேர்ந்த ஜிதேந்திர ஜோஷி என்பவருக்கும், முரைனாவைச் சேர்ந்த நம்ரதா ஜோஷி என்பவருக்கும் ஜூன் 28-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு மணப்பெண் புகுந்த வீட்டிற்கு வந்த நிலையில், அன்றிரவு மணமக்களுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவியது. ஆனால், மறுநாள் காலை மணமகன் கண்விழித்துப் பார்த்தபோது, மணமகள் நம்ரதா வீட்டில் இல்லை. கதவுகள் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், அவர் எப்படி வெளியே சென்றார் என்பது புரியாமல் மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மணமகள் நம்ரதா வீட்டின் மேற்கூரைகள் வழியாகத் தாவித் தனது காதலனுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகளும் திருடுபோயிருந்தது. இது குறித்து மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தகவலறிந்து வந்த மணப்பெண்ணின் வீட்டார், நம்ரதாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்குத் தனது தவறை ஒப்புக்கொண்ட நம்ரதா, கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழத் தயார் என்று கூறினாலும், திருமணமான மறுநாளே நடந்த இந்தச் சம்பவத்தால் மணமகன் மிகுந்த அச்சத்திலும் ஏமாற்றத்திலும் உள்ளார்.
