கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் சிரூர் கிராமத்தில் பருவமழை பொய்த்துப் போனதால், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இதனால் கவலையடைந்த கிராம மக்கள், வருண பகவானின் அருளைப் பெற்று மழை பொழிய வைப்பதற்காக ஒரு ஜோடி கழுதை மற்றும் ஒரு ஜோடி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நூதன வழிபாட்டை நடத்தினர். இதற்காக கிராம மக்கள் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் என இரு குழுக்களாகப் பிரிந்து, திருமண வரவேற்பு பேனர்கள் அமைத்து முறைப்படி திருமண ஏற்பாடுகளைச் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘காந்தேஷ்’ என்று பெயரிடப்பட்ட ஆண் கழுதைக்கும், ‘கஸ்தூரி’ என்று பெயரிடப்பட்ட பெண் கழுதைக்கும் மாலைகள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. இதேபோல் ஒரு ஜோடி தவளைகளும் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தில் உள்ள உள்ளூர் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு வேத மந்திரங்கள் மற்றும் கெட்டிமேளம் முழங்க, கிராம மக்கள் அட்சதை தூவி இந்த நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து வருண பகவானுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, கழுதைகளுக்கு உணவளிக்கப்பட்டதோடு, திருமணத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அனைவருக்கும் தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. இந்த வினோத வழிபாடு அப்பகுதியில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
