கரூர் மாவட்டத்தில் காவல்துறையை ஏவி தங்கள் மக்களைக் கொன்று குவித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சினைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது.

சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர் நகலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பெயர் இடம் பெற்றுள்ள ஒரு இக்கட்டான சூழ்நிலையில், அவரே தற்போது காவல்துறையின் மீது இவ்வாறு பகிரங்கமாகக் குற்றம் சாட்டிப் பேசியுள்ளது இந்த விவகாரத்தை சிக்கலாக்கியுள்ளது.

மேலும் முன்னதாக கரூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட  நிலையில் ஏற்கனவே டெல்லியில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் விசாரணைக்காக சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கரூரில் ரவுடிகளின் அராஜகம் இருக்கிறது எனவும் கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம் எனவும் அமைச்சர் ஆதவ் நேற்று ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.