ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தின் மலைக்கிராமத்தில், மரணப் போராட்டத்திலிருந்த ஒரு பழங்குடியின பள்ளி மாணவியின் உயிரைக் காப்பாற்ற, ஆசிரமப் பள்ளி பெண் காப்பாளர் செய்த அசாத்திய துணிச்சல் காரியம் ஒட்டுமொத்த தேசத்தையும் நெகிழ வைத்துள்ளது. பத்ரகிரி பழங்குடியின நலப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி வடகா புவனேஸ்வரி, காய்ச்சல் காரணமாகத் தன் சொந்த ஊரான வடபுட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ஆபத்தான நிலைக்குச் சென்றார்.
இதையறிந்து துடித்தெழுந்த பள்ளி காப்பாளர் கும்பூர்கா ஹேமானி, ஒரு தனியார் செவிலியருடன் உடனடியாக அந்த மலைக்கிராமத்திற்கு விரைந்தார். மாணவியைப் பரிசோதித்த செவிலியர், “இவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை தேவை, இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து” என எச்சரித்தார். ஆனால், அந்த கிராமத்தில் இருந்து பிரதான சாலைக்குச் செல்ல எந்த ஒரு வாகன வசதியோ, முறையான சாலையோ கிடையாது.
ஒரு நிமிடம் தாமதித்தாலும் மாணவியின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த ஹேமானி, சற்றும் யோசிக்காமல் 7-ஆம் வகுப்பு மாணவியை அப்படியே தன் முதுகில் தூக்கிச் சுமந்து கொண்டு, கரடுமுரடான பாதையில் நடக்கத் தொடங்கினார். மாணவியின் பெரியப்பாவும் உடல்நலக் குறைவால் தவித்ததால், காப்பாளரே முழுப் பொறுப்பையும் ஏற்று, 6 கிலோமீட்டர் தூரம் மாணவியைத் தன் முதுகிலேயே சுமந்து வந்து பிரதான சாலையை அடைந்தார்.
அங்கிருந்து வாகனம் மூலம் பார்வதிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். “சரியான நேரத்தில் கொண்டு வந்ததால் மட்டுமே மாணவி உயிர் பிழைத்தார்” என மருத்துவர்கள் நெகிழ்ச்சியோடு கூறினர். இந்த நெஞ்சை உருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் வேளையில், “என்னைப்போல யாரும் துடிக்கக் கூடாது, மலைக்கிராமங்களின் சாலை வசதிகளை அரசு உடனே சீரமைக்க வேண்டும் என கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளார் இந்த நிஜ உலக நாயகி ஹேமானி.
VIDEO | Andhra Pradesh: Tribal school warden in Parvathipuram Manyam carries ill student 6 km on her back to hospital after transport fails. pic.twitter.com/DrW2LVaK2a
— Press Trust of India (@PTI_News) July 2, 2026
