கொல்கத்தாவின் நரேந்திரபூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளியில் தங்கி, 12-ஆம் வகுப்பு படித்து வந்த திப்தான்ஷு மஹதோ என்ற மாணவன், தெர்மாஸ் பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் தேநீரைக் குடித்த பிறகு திடீரென உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ள மாணவனின் தந்தை, தனது மகனின் உடல்நிலை மோசமடைந்த பிறகும் பள்ளி நிர்வாகம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், தான் வரும் வரை ஏன் காத்திருந்தது என்று பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
சம்பவத்தன்று காலை 11:15 மணிக்கு மகனின் உடல்நிலை குறித்து போன் வந்ததாகவும், மதியம் 1 மணிக்கு தான் பள்ளிக்குச் சென்றபோது திப்தான்ஷு தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்ததாகவும் தந்தை கூறியுள்ளார். காரில் அழைத்துச் செல்லும் போது ஒரு மடக்கு தண்ணீர் குடித்த உடனே மாணவன் மயங்கி விழுந்துள்ளான். பின்னர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“டீ கொதிக்கும்போது வாய் வெந்தும் ஏன் விழுங்கினாய்?” என்று தந்தை கேட்டதற்கு, “டீயை வெளியில் துப்பினால் தரை அசிங்கமாகிவிடும், தரை பாழாகக் கூடாது என்பதற்காகவே விழுங்கினேன்” என்று திப்தான்ஷு இறப்பதற்கு முன் கூறிய உருக்கமான தகவல் நெஞ்சை பதறவைத்துள்ளது.
இந்த விசித்திர மரணம் குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவர் ரவிகாந்த் சதுர்வேதி வெறும் சூடான தேநீர் குடிப்பதால் மட்டுமே ஒரு நபர் நேரடியாக மரணமடைய முடியாது என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும் என்றும் கூறியுள்ளனர். எனினும், மிகவும் அரிதான நிகழ்வாக, கொதிக்கும் தேநீரைக் குடித்ததால் அவனது உணவுக் குழாய் அல்லது சுவாசக் குழாய் பலத்த சேதமடைந்திருக்கலாம், அல்லது தொண்டையிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் செயலிழந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நீண்ட நாட்களாகத் தெர்மாஸ் பாத்திரத்தைச் சுத்தப்படுத்தாமல் இருந்திருந்தால், தேநீரில் விஷத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் அல்லது கடுமையான வலியின் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர்கள் கணித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
