குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக, சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) அமைப்பின் மகாராஷ்டிர மாநிலப் பொதுச்செயலாளர் சயீத் அகமது அப்துல் சவுத்ரி மீது மும்பை போலீஸார் 4 எப்ஐஆர்களை பதிவு செய்திருந்தனர். இதைக் காரணமாகக் காட்டி, அவர் மும்பைக்குள் நுழையக் கூடாது என ஓராண்டு காலத் தடையை மும்பை காவல்துறை மற்றும் கொங்கண் மண்டல ஆணையர் ஆகியோர் விதித்திருந்தனர்.
இந்த உத்தரவுகளை எதிர்த்து சயீத் தாக்கல் செய்த மனு, மும்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மாதவ் ஜாம்தார் முன் விசாரணைக்கு வந்த போது, அவர் மும்பை காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். “இங்கே என்ன நடக்கிறது? இந்திய குடிமக்கள் அனைவரும் இந்திய அரசாங்கத்தின் அடிமைகளாக்கப்படுகிறார்களா? அவர்களால் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்த முடியாதா? இப்போது கூட பல்வேறு வினாத்தாள்கள் கசிந்துள்ளன.
அதற்கு எதிராக மக்கள் போராடினால் வழக்குகளைப் பதிவு செய்வீர்களா? போராடுவது குடிமக்களின் உரிமை. மனுதாரர் ‘பாஜக அரசு ஒழிக’, ‘அமித் ஷா ஒழிக’ என்றுதானே முழக்கமிட்டுள்ளார், குடிமக்கள் ஏன் இத்தகைய முழக்கங்களை எழுப்பக் கூடாது?” என்று நீதிபதி அடுக்கடுக்கான அதிரடி கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து தனது கண்டனத்தைப் பதிவு செய்த நீதிபதி மாதவ் ஜாம்தார், “காவல்துறையினர் ஒன்றும் நாட்டின் பிரதமருக்கோ அல்லது மாநில முதலமைச்சருக்கோ வேலை செய்யும் தனிப்பட்ட ஊழியர்கள் அல்ல; அவர்கள் பொது மக்களின் ஊழியர்கள்” என்று மிகவும் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின்படி, நாட்டின் குடிமக்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை இருப்பது மட்டுமன்றி, கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமையும் உள்ளது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும் அரசாங்கத்தின் முடிவுகளை எதிர்த்துப் போராடியதற்காக மனுதாரர் சயீத் அகமது மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்ட நீதிபதி, அவர் மும்பைக்குள் நுழையக் கூடாது என போலீஸார் விதித்திருந்த தடை உத்தரவை முற்றிலும் ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
