இந்தியாவில் குறைந்த விலையிலான மின்சார வாகனங்கள், குறிப்பாக ஈ-ரிக்‌ஷாக்களில்  பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளைக் கண்காணிப்பதற்காக ‘BAT BMS’ என்ற அதிகம் அறியப்படாத சீன மொபைல் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, சாலையில் நட்டநடுவே ஓடிக்கொண்டிருக்கும் ஈ-ரிக்‌ஷாக்களின் பேட்டரியை மர்ம நபர்கள் சிலர் ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் தூரத்திலிருந்தபடியே ‘ஆஃப்’ செய்து, ஓட்டுநர்களை நடுத்தெருவில் தவிக்கவிடும் ஆபத்தான ‘பிராங்க்’ வீடியோக்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

இதனால் டிராஃபிக் நெரிசலில் திடீரென பவர் இழந்து வாகனம் நிற்பதால் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இது வெறும் ஆன்லைன் விளையாட்டு கிடையாது, பொதுமக்களின் உயிருக்கு விளைவிக்கும் அச்சுறுத்தல் என எச்சரித்த மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தச் செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் இது போன்ற வீடியோக்களை எடுத்து பதிவிட்ட ஒரு நபரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து முதன்முறையாகச் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 

பொதுவாக எலக்ட்ரிக் வாகனங்களின் மூளையாகச் செயல்படும் ‘பேட்டரி மேலாண்மை அமைப்பு’ (BMS), பேட்டரியின் வெப்பநிலை, சார்ஜ் அளவு போன்றவற்றை போனில் காட்டும் வசதி கொண்டது. ஆனால், இந்த ‘BAT BMS’ செயலியில் முறையான அங்கீகார பாதுகாப்பு இல்லாததால், அருகில் இருக்கும் யாருடைய போனிலும் அந்த வாகனத்தின் பேட்டரி விவரங்கள் எளிதாகக் கனெக்ட் ஆகி விடுகின்றன.

இதனைப் பயன்படுத்தி பிராங்க் செய்பவர்கள், வாகனத்தின் பேட்டரியை ஆஃப் செய்வது மற்றும் அதன் செட்டிங்ஸை மாற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். டாடா, மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் குறியாக்கம் செய்யப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டிருப்பதால் அவற்றுக்கு இந்த ஆபத்து இல்லை என்றாலும், சாதாரண ஈ-ரிக்‌ஷாக்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

 

இதன் பின்னணியில் உள்ள சீன மென்பொருள் நெட்வொர்க் மற்றும் இந்தியர்களின் தரவு பாதுகாப்பு குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. சைபர் நிபுணர்கள், ஈ-ரிக்‌ஷா உரிமையாளர்கள் உடனடியாகத் தங்களின் பேட்டரி சாஃப்ட்வேரை அப்டேட் செய்யவும், டீஃபால்ட் பாஸ்வேர்டுகளை மாற்றவும், தேவையில்லாத போது ப்ளூடூத் தேடலை அணைத்து வைக்கவும் அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.