கரூர் மாவட்டம் மணவாசி பகுதியைச் சேர்ந்த ஜீவா என்ற நடனக் கலைஞர், நேற்று இரவு தொழிற்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் தனது குழுவினருடன் இணைந்து மேடையில் விறுவிறுப்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் முன்னிலையில் அவர் ஆடிக்கொண்டிருந்த போது, அவருக்கு எதிர்பாராதவிதமாக திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, நடனமாடிக் கொண்டிருந்த ஜீவா கண் இமைக்கும் நேரத்தில் மேடையிலேயே சுருண்டு மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக நடனக் கலைஞர்களும், திருவிழாவிற்கு வந்திருந்த பொதுமக்களும் உடனடியாக மேடைக்கு ஓடிவந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கரூர் அருகே கோவில் திருவிழாவில் நடனமாடிய கலைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பு
மாரடைப்பு ஏற்பட்டு இருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தகவல்
#Karur #TempleFestival #HeartAttack #News18TamilNadu pic.twitter.com/vFQK6Y9G5s
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 3, 2026
மயங்கி விழுந்த ஜீவாவை அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தனர். மேடையில் ஆடிக்கொண்டிருந்த கலைஞர் ஒருவர் மாரடைப்பால் மேடையிலேயே உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம், கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீப காலமாகவே குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இளம் வயதிலேயே மாரடைப்பால் திடீரென மரணம் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
