கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி (27). இவருக்கும்திருவனந்தபுரம் அடுத்த விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் கணவர் வீட்டில் விக்னேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார். மாலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய மாமனார் சந்திரன், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னல் கண்ணாடியை உடைத்துப் பார்த்துள்ளார்.
அப்போது படுக்கை அறையில் விக்னேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், விக்னேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் தங்களது திருமண நாளைக் கொண்டாடியதாகக் கூறிய கணவர் அபிலாஷ், தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்தார் .
ஆனால், விக்னேஸ்வரி தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது கணவர் அபிலாஷ் தினமும் மதுபோதையில் வந்து தன்னை கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் விக்னேஸ்வரி குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இளம்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கணவர் அபிலாஷை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
