ஒடிசா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அண்மையில் வெளியிடப்பட்ட 5-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஹம் தில் தே சுகே சனம்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘நிம்புடா நிம்புடா’ பாடல் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடலான இது, திரைப்பட வடிவில் அப்படியே புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பயிலும் பாடப்புத்தகத்தில் இத்தகைய சினிமா பாடல் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்று கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

புத்தகங்களைத் தொகுக்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பத் தவறா அல்லது அதிகாரிகளின் அலட்சியமா என்ற கோணத்தில் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் ஒடிசா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்  தயாரித்த இதர பாடப்புத்தகங்களிலும் மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட எழுத்துப் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக 8-ஆம் வகுப்பு புத்தகங்களில் மட்டுமே 705 பிழைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, தவறுகள் மற்றும் பிழைகள் அனைத்தும் முழுமையாகத் திருத்தப்பட்ட பின்னரே மாணவர்களுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று அம்மாநில பள்ளி மற்றும் மக்கள் கல்வித்துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட் தெரிவித்துள்ளார். மேலும், இந்த குளறுபடிகள் குறித்து விரிவாக விசாரிக்க ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உத்தரவிட்டுள்ளார்.