நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு காரணமாக, நதியில் நீர்மட்டம் திடீரென உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, உத்தேசப் பிரதேச மாநிலம் குஷிநகர் அருகே உள்ள நதியிலும், அதன் கரையோரப் பகுதிகளிலும் பெரிய அளவிலான மீன்கள், சமையல் எரிவாயு உருளைகள் (சிலிண்டர்கள்) மற்றும் பல்வேறு இடிபாட்டுப் பொருட்கள் அடித்து வரப்பட்டு மிதந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்திலிருந்து அடித்து வரப்பட்ட டிரம்கள், கேஸ் சிலிண்டர்கள், விலைமதிப்பவற்ற மரக்கட்டைகள் மற்றும் ராட்சத மீன்களைக் கைப்பற்ற கிராம மக்கள் நதிக்கரையில் பெருந்திரளாகக் குவிந்துள்ளனர்.

வியாழக்கிழமை அன்று நதியின் நீரோட்டம் சற்று குறைந்தவுடன், ஆற்றில் அடித்து வரப்பட்ட பொருட்களும் மீன்களும் நீர்ப்பரப்பிற்கு மேலே மிதக்கத் தொடங்கின. இதனால், சிட்டௌனி கரையில் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவற்றை அள்ளிச் செல்ல முட்டி மோதினர்.

ஹனுமன்கஞ்ச் மந்திர் டோலா பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் இறங்கி, சுமார் 50 கிலோ எடையுள்ள ராட்சத கோஸ்டா மீனை வெற்றிகரமாகப் பிடித்துள்ளனர். அந்த பிரம்மாண்ட மீனைத் தோளில் சுமந்தபடி அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது, அதைக் காண கிராம மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட கேஸ் சிலிண்டர்கள், டிரம்கள் மற்றும் விலை உயர்ந்த மரங்களையும் கிராமவாசிகள் பிடித்துச் சென்றனர்.

வேகமாகப் பாய்ந்தோடும் நதியில் மக்கள் தங்கள் உயிரை பணையம்  வைத்து இறங்குவது பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது. வலுவான நீரோட்டத்திற்கு இடையில் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் மரக்கட்டைகளைப் பிடிக்க மக்கள் முண்டியடிப்பதால் எந்த நேரத்திலும் பெரிய விபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே, அசம்பாவிதங்களைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மக்களை நதியில் இறங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் பகுதிக்கு இதுவரை நேரடி வெள்ள அபாயம் ஏற்படவில்லை என்றாலும், அதிகாரிகள் கண்டகி மற்றும் நாராயணி நதிகளைக் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். உ.பி.யின் எல்லை மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் , நேபாளம் கடுமையான வெள்ளப் பேரிடரைச் சந்தித்து வருகிறது. வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.  இதுவரை 175 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களைத் தேடும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.