பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான வெறும் 19 நாட்களுக்குள், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மனைவியை தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்ற கணவனுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பஸ் நிலையத்தில் மனைவியை விட்டுவிட்டு ஏதோ வாங்கச் சென்ற கணவன் திரும்பி வந்து பார்த்தபோது, மனைவி மாயமாகியிருந்தது தெரியவந்துள்ளது. எனினும், போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் இந்த மர்மம் விலகியது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிண்டு குமாருக்கும், பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்த தாராவதி குமாரிக்கும் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான 19 நாட்களுக்குப் பிறகு, ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் தாய்வீட்டுக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டார் பிண்டு.
இருவரும் சௌசா பஸ் நிலையம் அருகே வந்தபோது சிறிது நேரம் ஓய்வுக்காக நின்றனர். அப்போது தாராவதி தனது கணவனிடம் ரக்ஷா பந்தனுக்காகச் சில இனிப்புகளை வாங்கி வருமாறு கூறியுள்ளார். மனைவியை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு பிண்டு அருகில் இருந்த கடைக்குச் சென்றார். ஆனால், அவர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கே மனைவி இல்லை. பதறிப்போன அவர் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால், நள்ளிரவு 12 மணியளவில் அவசர உதவி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கி, செல்போன் டவர் லொகேஷன் மற்றும் இதர தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில் துப்பு துலக்கியது.
விசாரணையில், தாராவதிக்கு ஏற்கனவே உத்கர்ஷ் குமார் என்பவருடன் காதல் தொடர்பு இருந்தது தெரியவந்தது. போலீசார் உத்கர்ஷின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியபோது, தாராவதி தனது தாயின் வீட்டில் இருப்பதாகத் தெரிவித்தார். உடனடியாக மற்றொரு போலீஸ் குழு அங்கு விரைந்து சென்று, நள்ளிரவு தகவல் கிடைத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே புதுமணப் பெண்ணை வெற்றிகரமாக மீட்டது.
குடும்பத்தினருக்கு ஏற்கனவே இவர்களின் காதல் விவகாரம் தெரிந்திருந்தாலும், வற்புறுத்திப் பிண்டுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் தாராவதி தனது திட்டத்தின்படி, முன்கூட்டியே காதலனிடம் விவரங்களைக் கூறிவிட்டு, பஸ் நிலையத்தில் கணவனை மிட்டாய் வாங்க அனுப்பிவிட்டு காதலனின் பைக்கில் ஏறிச் சென்றுள்ளது விசாரணையில் அம்பலமானது. தற்போது காவல்துறையினர் அந்தப் பெண் மற்றும் காதலனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
