திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு தாலுகாவில் ஏனாதவாடி என்ற கிராமத்தை சேர்ந்த பெண் நதியா. இவரது பெற்றோர்கள் பெருமாள்- மங்களவள்ளி. அவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்ற இளைஞருக்கு, நதியாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின் திருமணமான மூன்றாவது மாதத்தில் நதியாவிற்கும், மகேஸ்வரனுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்ட காரணத்தினால் நதியா கணவரைப் பிரிந்து தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மகள் வாழா வெட்டியாக இருப்பதை பார்த்து மன உளைச்சலில் இருந்த அவரது தந்தை பெருமாள் அவரது உறவினர்களை அழைத்துக் கொண்டு மகளின் கணவர் வீட்டிற்கு சென்று சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆனால் மகேஸ்வரன் நதியாவுடன் சேர்ந்து வாழ முடியாது என திட்டவட்டமாக கூறியதால் மிகுந்த மனவேதனையுடன் பெருமாள் வீடு திரும்பி உள்ளார். பின்னர் தனது நிலத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்ட அவரது உறவினர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பெருமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து பெருமாளின், மனைவி மங்களவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணத்தை விசாரணை செய்து வருகின்றனர். மகளின் திருமண வாழ்க்கையை நினைத்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
