தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று இரவு கிளம்பிய அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தை கடந்தனர். அப்போது முன் சென்ற வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

இதனால் அந்த வேன் கவிழ்ந்து வேனில் இருந்த பயணிகள் அலறினர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் வேனின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தியணைப்பு துறையினர் உதவியுடன்‌ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 2 பெண்கள் மற்றும் 1 சிறுவன் உட்பட 10 பேருக்கும் மேல் படுகாயம் ஏற்பட்டது. எனவே அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு அப்பகுதிக்கு கிரேன் வரவழைத்து விபத்தில் சிக்கிய வேனை அப்புறப்படுத்தினர்.

இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.