திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பெருமாள்(44)- மங்களவள்ளி தம்பதியினர். பெருமாள் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு நதியா என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கு கடந்த 2024 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் உடன் திருமணம் நடந்தது.
ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை எதிர்பார்த்தது போல் அமையவில்லை. திருமணமான 3 மாதத்திலேயே நதியாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு நதியா அவர் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் நதியாவின் பெற்றோர் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 11 -ஆம் தேதி நதியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து மகேஸ்வரன் வீட்டிற்கு பேச்சு வார்த்தைக்காக சென்றுள்ளனர். அப்போது மகேஸ்வரன் நதியாவுடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். இதனால் நதியாவின் தந்தை மன உளைச்சலுடன் வீடு திரும்பியுள்ளார்.
பின்பு வயலுக்கு சென்ற பெருமாள் அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பெருமாளின் உறவினர்கள் அவர் மயங்கி கிடப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாளின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
