தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரை சேர்ந்தவர் குணசேகரன்(60). இவரது மனைவி காசி அம்மாள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணம் ஆனதால் அவர் தனி குடுத்தனம் நடத்தி வருகிறார். மகளுக்கும் திருமணம் ஆன நிலையில் தம்பதியினர் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காசி அம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் குணசேகரன் ஒரு வருடமாக மனைவி இறந்த சோகம் தாங்காமல் அதிக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று குணசேகரன் அதிக மன அழுத்தத்தின் காரணமாக  வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு குணசேகரன் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.