கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பாகல்ஹாம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனால் பாகிஸ்தானில் கடுமையான பாசன நீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் அந்நாட்டு நீர் மேலாண்மை அதிகாரிகளிடையே நிலவியது. கடந்த மே மாதம் தொடங்கிய முக்கியமான காரிஃப் பயிர் சாகுபடி சீசனின் தொடக்கத்தில், சுமார் 21 சதவீத நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் கணித்திருந்தன.
செனாப் மற்றும் ஜீலம் நதி நீர் அமைப்புகளில் இந்தியாவின் நீர் வரத்து குறைந்தது, தர்பேலா மற்றும் மங்லா அணைகள் மிகக் குறைந்த நீர்மட்டத்தை எட்டியது போன்ற காரணங்களால் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட எதிர்பாராத கடுமையான வெள்ளமும், சிந்து நதிப் பகுதியில் அதிகரித்த பனி உருகலும் பாகிஸ்தானை இந்த இக்கட்டான நதிநீர் நெருக்கடியிலிருந்து தற்காத்துக் காப்பாற்றியுள்ளது. இதன் மூலம், சீசனின் இறுதியில் பாகிஸ்தானின் முக்கிய அணைகள் 99 சதவீத கொள்ளளவை எட்டி நிரம்பின.
இருப்பினும், பாகிஸ்தானின் விவசாய வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதிப் பாசன அமைப்பிற்கு மற்றொரு பெரும் ஆபத்து காத்திருப்பதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. பாகிஸ்தானின் நீர் வங்கியாகவும், மின் உற்பத்தியின் முக்கிய ஆதாரமாகவும் விளங்கும் தர்பேலா (Tarbela) அணை, பல தசாப்தங்களாக சேர்ந்த வண்டல் மண் காரணமாக அதன் அசல் கொள்ளளவில் சுமார் 48 சதவீதத்தை இழந்து தற்போது வெறும் 5.73 MAF ஆகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2022 மே மாதத்தில் 5.827 MAF ஆக இருந்த இதன் கொள்ளளவு, 2025-ல் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான வண்டல் மண் வரத்து காரணமாக, 2026 மார்ச் மாதத்தில் 5.580 MAF ஆகக் கடுமையாகச் சரிந்துள்ளது. பாகிஸ்தானின் 90 சதவீத விவசாய உற்பத்தி சிந்து நதிப் பாசனத்தையே நம்பியிருக்கும் வேளையில், தர்பேலா அணையின் இந்த தொடர் கொள்ளளவு சரிவு என்பது வெள்ளத்தால் கூட தீர்க்க முடியாத ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
