உத்தரகாண்டின் தேஹ்ராடூன் பகுதியில் சாலையோரத்தில் பழச்சாறு விற்பனை செய்துவரும் ஒருவரின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பெண் படம் பிடித்த வீடியோவில், அந்த வியாபாரி தனது தனிப்பட்ட பகுதியை ஒரு துணியால் துடைத்து, அதே துணியை பழச்சாறு தயாரிக்கும் பாத்திரத்தில் போட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதும், மக்கள் உணவுப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த அந்த பெண், வியாபாரியை நேரில் சந்தித்து வாக்குவாதம் செய்துள்ளார். “நீ என்ன செய்றேன்னு தெரியுமா? அதே துணியால ஜூஸ் செய்யற பாத்திரத்துல போட்டுட்ட” எனக் கூறி, வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதற்குப் பதிலாக, குற்றவாளியான பழச்சாறு விற்பனையாளர், “எனக்கு வயிற்றின் கீழ்ப்பகுதியில் கட்டி இருந்தது, அதனால் சுத்தம் பண்ணினேன்” என்று கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண், “அதற்கு நீங்க வடிகால் பக்கத்திற்கு போக வேண்டும்… ஜூஸ் வண்டியில இதெல்லாம் செய்யக்கூடாது” என கண்டித்துள்ளார்.

இந்த வீடியோ வெளியான உடனே, பொதுமக்கள் கண்டனத்தில் வெடித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரியின் வண்டியை பறிமுதல் செய்ததுடன், அந்த இடத்தில் மீண்டும் வியாபாரம் செய்ய வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், சுகாதார முறைகளை மீறியதற்காக அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் சுகாதாரத்தை பாதுகாக்க, இதுபோன்ற துரோகம் செய்யும் கடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.