கனமழையில் சிக்கித் தவித்த தெரு நாய் ஒன்றையும், அதன் புதுப்பிறந்த குட்டிகளையும் ஒரு குடும்பத்தினர் பத்திரமாக மீட்டுத் தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பான காணொளி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி, காண்போரின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. மழையில் ஒதுங்கக்கூட வழியின்றி அவதிப்பட்ட அந்தத் தாய் நாயையும் அதன் குட்டிகளையும் கண்ட அக்குடும்பத்தினர், சிறிதும் யோசிக்காமல் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

“>

அவர்கள் அந்தத் தாய் நாயையும் அதன் குட்டிகளையும் மிகவும் கவனமாகத் தூக்கிச் சென்று, தாங்கள் புதிதாகக் கட்டி வரும் வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். மழை நீர்படாதவாறு ஒரு சுத்தமான, உலர்ந்த மூலையைத் தேர்ந்தெடுத்து, அவை தங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுத்தனர்.

அத்துடன் அஃறிணை உயிர்களின் பசியைப் போக்க உணவும் குடிநீரும் வழங்கி அரவணைத்தனர். “எதையும் எதிர்பார்க்காமல் அவர்கள் காட்டிய இந்தக் கருணை, மனிதநேயம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது” என்ற குறிப்புடன் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், “சிறிய கருணைச் செயலும் ஒரு உயிரைக் காப்பாற்றும்” என்ற செய்தியும் அழுத்தமாக உணர்த்தப்பட்டுள்ளது.

இந்த அன்பான செயலைக் கண்டு சமூக வலைதளப் பயனர்கள் பலரும் அக்குடும்பத்தினருக்குத் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். வீடற்ற தெருவிலங்குகளைப் பாதுகாப்பதில் இக்குடும்பம் காட்டிய பரிவு தங்களை மிகவும் நெகிழ வைத்ததாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் “இது என் மனதைத் தொட்டுவிட்டது”, “நீங்கள் மிகவும் சிறந்த மனிதர்கள்” மற்றும் “சிலருக்கு மட்டுமே இதுபோன்ற பெரிய மனது இருக்கும்” என இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து, இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.