இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் தலையணை, போர்வை, துண்டுகள் மற்றும் மெத்தை விரிப்புகள் அதிக அளவில் திருடு போவதாக அண்மைக்காலமாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. ஆண்டுதோறும் ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் மாயமாவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. “இத்தனை போர்வைகளும் எங்கேதான் போகின்றன?” என்று அனைவரும் தலைபிச்சுக் கொண்டிருந்த வேளையில், அதற்குப் பதிலளிப்பது போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் காய்கறிச் சந்தையில் மிகவும் சாதாரணமாக உலா வருகிறார். ஆனால், அவர் அணிந்திருக்கும் சட்டையைக் கூர்ந்து கவனித்த மக்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது! அவர் அணிந்திருப்பது சாதாரண சட்டையல்ல; இந்திய ரயில்வேயின் ‘மேற்கு ரயில்வே’ முத்திரை பொறிக்கப்பட்ட வெள்ளை நிற மெத்தை விரிப்பால் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட சட்டை ஆகும்.
View this post on Instagram
பொதுச்சொத்துக்களைத் திருடுவது மற்றும் சேதப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது என்ற கருத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் பலவாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். “இப்போதுதான் ரயில்வே போர்வைகள் எங்கே மாயமாகின்றன என்ற ரகசியம் புரிகிறது” என்று சிலர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், “நன்கு படித்த பலரே கூட ரயில்வே பொருட்களைத் தங்கள் பைகளில் சுருட்டிக் கொண்டு போவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்று ஆதங்கத்துடனும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ வேடிக்கையாக இருந்தாலும், ரயில்வே சொத்துக்களைத் திருடுவது சட்டப்படி கடுமையான குற்றமாகும். ரயில்வே சட்டம், 1989-ன் படி, ரயில்வேக்குச் சொந்தமான போர்வைகள், கண்ணாடிகள், மின்சாரக் கம்பிகள், இரும்புப் பொருட்கள் அல்லது தண்டவாளங்கள் போன்றவற்றைச் சேதப்படுத்தினாலோ அல்லது திருடினாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
