மும்பை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் லோக்கல் ரயில்களில், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பயணிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் லோக்கல் ரயிலில் பயணித்த பெண் ஒருவர், வாசலில் தொங்கியபடி பயணிக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலின் வாசலில் தொங்கியபடி வந்த அந்தப் பெண்ணின் சேலை, தண்டவாளத்தின் அருகே இருந்த பாலத்தின் தூணில் உரசும் காட்சி பார்ப்போரை உறைய வைக்கிறது. சில வினாடிகள் தாமதித்திருந்தாலும் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் எந்தக் காயமுமின்றி தப்பினார். இச்சம்பவம் குறித்துப் பயணிகள் கூறுகையில், “ரயில்வே நிர்வாகம் வாசலில் நின்று பயணிக்க வேண்டாம் என எச்சரித்தாலும், அலுவலக நேரமே  பயணிகளை இதுபோன்ற ஆபத்தான முடிவை எடுக்க நிர்பந்திக்கிறது” என வேதனை தெரிவிக்கின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by NavaRashtra (@navarashtra)

ஒருபுறம் ரயில் விபத்துகள் அச்சுறுத்தும் வேளையில், மறுபுறம் பயணிகள் இடையேயான மோதல்களும் ரத்தக் களறியாக மாறி வருகின்றன. அதாவது சமீபத்தில் கதவைத் திறந்து வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மயங்க் லோஹர் (22) என்ற இளைஞர், சக பயணியான ரோஷன் என்பவரால் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகப் போலிஸார் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

அதேபோல மற்றொரு ரயிலில் ‘சீட்’ பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒரு பயணி தன் கையில் அணிந்திருந்த கனமான உலோகப் பிரேஸ்லெட்டால் மற்றொரு பயணியைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லோக்கல் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.