உத்தரப் பிரதேச மாநிலம் மேரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நேஹா ராணி (25) என்ற நர்ஸ் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையில் ஓடி டெக்னீசியனாகப் பணியாற்றி வரும் சுரேஷ் என்பவருடன் நேஹாவிற்கு கடந்த ஏழு மாதங்களாகக் காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சுரேஷ் ஏற்கனவே திருமணமானவர் மற்றும் ஒரு குழந்தைக்குத் தந்தையாவார். இருப்பினும், சுரேஷைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நேஹா தொடர்ந்து வற்புறுத்தி வந்ததே இந்தப் படுகொலைக்குக் காரணமாக அமைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று, உடல்நலக்குறைவாக இருப்பதாகக் கூறிய நேஹாவிற்கு, சுரேஷ் ஒரு சொட்டு மருந்து ஏற்றியுள்ளார். அந்த மருந்திலேயே விஷத்தைக் கலந்து அவர் நேஹாவின் உயிரைப் பறித்ததோடு, அவர் மயக்க நிலையில் இருந்தபோது விஷத்தையும் வலுக்கட்டாயமாகப் புகட்டியுள்ளார்.
நேஹாவின் தற்கொலையாக இதைச் சித்தரிக்க, கொலை செய்த கையோடு அவளது ஆடைகளுக்குள் போலி தற்கொலைக் கடிதம் ஒன்றையும் சுரேஷ் மறைத்து வைத்துள்ளார். இக்கொலைச் செயலுக்கு தனது நண்பன் பர்ஹானையும் பண ஆசை காட்டி சுரேஷ் உடந்தையாகச் சேர்த்துக் கொண்டுள்ளார்.
காவல்துறையின் தீவிர விசாரணையில், சுரேஷ் முன்னரே யுடியூப் தளத்தில் கொலை செய்வதற்கான வழிமுறைகளைத் தேடியதும், பர்ஹானுடன் சேர்ந்து இந்தக் கொடூரத் திட்டத்தைச் செயல்படுத்தியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நேஹாவைக் கொன்ற பிறகு இருவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவருந்தியது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
கணவனை இழந்த நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நேஹாவை, காதலன் என்ற போர்வையில் இருந்த நபர் மிகக் கொடூரமாகக் கொன்றுள்ள சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கொலை தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
