2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் முழு உற்சாகத்துடன் தேர்தலில் களம் இறங்க தயாராகிறது. இது அந்தக் கட்சியின் முதலாவது தேர்தல் என்பதால், ஆரம்பத்திலேயே வாக்காளர்களிடம் உறுதியான முத்திரை பதிக்க கட்சி வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அதன் முதலாவது மாநில மாநாடு நடைபெற்றது. இரண்டாவது மாநில மாநாடு சமீபத்தில் மதுரையில் வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்நிலையில், தற்போது தேர்தலுக்கான அடுத்த கட்டத்துக்கு கட்சி நகரத் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க உள்ளதாக, கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பயணத்தின் தொடக்க நாள் செப்டம்பர் 17 என கூறப்படுகிறது. அது தந்தை பெரியார் பிறந்தநாளும் ஆகும். இதை நினைவுகூரும் விதமாக, முதல் மக்கள் சந்திப்பு ஈரோட்டில் நடக்கவுள்ளது.

இந்த முயற்சியை முன்னிட்டு, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் டெல்டா பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து மற்ற மாவட்டங்களின் செயலாளர்களுடனும் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரைவில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் முழுமையான பட்டியலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.