அதிமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் நேர்காணல், சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாளான இன்று, ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த நடிகை கவுதமி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேர்காணலில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 7 ஆண்டுகளாக ராஜபாளையம் தொகுதி மக்களுடன், குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். அதனால் அங்குப் போட்டியிட வாய்ப்புக் கேட்டுள்ளேன்; நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் அதிமுகவின் வாக்குகளை விஜய்யால் ஒருபோதும் அறுவடை செய்ய முடியாது” என அதிரடியாகப் பதிலளித்தார்.
விஜய்யின் அரசியல் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளதாகவும், அவரது செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறினார். அதிமுக கூட்டணி வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என்றும், எடப்பாடியார் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கவுதமி சூசகமாகத் தெரிவித்தார்.
