ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள மும்பை மாநகராட்சித் தேர்தலுக்காக (BMC Election), தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜக-விற்காக அண்ணாமலை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர், “மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்” என்று பேசியது மராட்டிய அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, அண்ணாமலையை ‘தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய்’ என்று கிண்டலடித்ததோடு, “உனக்கும் இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழர்களை) பால் தாக்கரே அன்று விரட்டி அடித்தார்” என ஆவேசமாகப் பேசினார்.

இதற்கிடையே உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவும் அண்ணாமலையை ‘ஜீரோ’ என்று சாடியுள்ளார். “அண்ணாமலை பாஜகவில் ஒன்றும் இல்லாதவர். தனது சொந்த ஊரிலேயே டெபாசிட் வாங்க முடியாமல் தோற்றவர்.

அவர் மும்பையைப் பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். அண்ணாமலையின் இந்தப் பேச்சு ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையும் அவமதிப்பதாக உள்ளது” என்று அவர் விளாசியுள்ளார்.