துக்ளக் விழாவில் விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த குருமூர்த்தி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாகவே மதிக்கவில்லை என்று ஓப்பனாகப் பேசியிருக்கிறார். “விஜய்க்கு பின்னால் இருப்பது வெறும் ஒரு கூட்டம்தான், அங்கே முறையான தொண்டர்களோ அல்லது முதிர்ச்சியான தலைமையோ கிடையாது” என்று அவர் விமர்சித்துள்ளார். விஜய் முதலமைச்சர் ஆவார் என்று பேசப்படுவதை “அபத்தம்” என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் களத்தில் நின்றால் தான் விஜய்யின் நிஜமான பலம் என்னவென்று தெரியும் என்றும் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​அண்ணாமலை மாற்றப்பட்டது குறித்துப் பேசிய குருமூர்த்தி, அது அவரை ஒதுக்கி வைப்பதல்ல, மாறாக திமுக ஆட்சியை அகற்றுவதற்காக அமித்ஷா வகுத்துள்ள ஒரு “அரசியல் யுக்தி” என்று விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிராவைக் கைப்பற்றிய அதே ஃபார்முலாவை இப்போது அமித்ஷா தமிழ்நாட்டிலும் கையில் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஏன் தினகரன் மற்றும் ஓபிஎஸ்-ஐ சேர்த்துக் கொள்ள மறுக்கிறார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும், யதார்த்த அரசியலை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் விமர்சித்துள்ளார். மொத்தத்தில், 2026 தேர்தலுக்கான சதுரங்கம் இப்போதே தொடங்கிவிட்டது.