ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்..

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட ஹவுரா விரைவு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி உள்ளது. ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் விரைவு ரயில் மற்றொரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்த 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பல பயணிகள் உள்ளே சிக்கியுள்ளனர்.. இதையடுத்து ரயில் விபத்து நடந்த பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் 6782 262 286 அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.. தொடர்ந்து மீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன..

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுளேன்.விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோரமண்டல் ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளது பி டி ஐ செய்தி நிறுவனம்..