விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிர்மலாதேவி என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிர்மலாதேவியை காவல்துறையினர் கைது செய்தனர். அதோடு வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்திருந்தார். ஆனால் அன்றைய தினம் நிர்மலாதேவி உடல்நலம் சரியில்லை எனக்கூறி கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்புசாமி மற்றும் முருகன் ஆகியோரை விடுதலை செய்த நீதிபதி நிர்மலா தேவியை குற்றவாளி எனக் கூறி தீர்ப்பு வழங்கினார்.